English tamil

அருள்மிகு சமயாள் குடில் மாரியம்மன் சக்தி பீடம் வளாகத்தில் அமையப் பெற்ற சன்னதிகள்
அருள்மிகு சமயாள் குடில் மாரியம்மன் சக்தி பீடம் வளாகத்தில் அமையப் பெற்ற சன்னதிகள்

அருள்மிகு சமயாள் குடில் மாரியம்மன் சக்தி பீட ஆலயம் மற்றும் சன்னதிகள் ஓங்கார வடிவில் அமைக்கப்பட்டுள்ளன.

ஸ்ரீ நர்த்தன விநாயகர் சன்னதி :

ஆலயத்தின் நுழை வாயிலைக் கடந்ததும் நாம் தரிசிப்பது ஸ்ரீ நர்த்தன விநாயகர் சன்னதி. இங்கு விநாயகர் தனது ‘சித்தி’ நாயகியை இடையில் அமர்த்திக் கொண்டு நர்த்தனம் புரியும் வடிவில் (நாட்டியம் ஆடும்) காட்சி தருகிறார்கள். மிகவும் ஆற்றல் வாய்ந்த இவரிடம் நமது வேண்டுதல்களை இறைஞ்சி தினம் ஒரு மாதுளை வைத்து குறிப்பிட்ட நாட்களுக்கு (30, 40, 48, 60 நாட்கள்) கேட்டால் உடனே கேட்ட வரத்தைக் கொடுப்பவர். பக்தி சிரத்தையுடன் நடத்தப்பட்டு வரும் “சங்கடஹர சதுர்த்தி” அன்று தங்கள் வேண்டுதல்கள் நிறைவேறியவுடன் தேங்காய் மாலை சார்த்தி வழிபடுவோரும் உண்டு. ஒரு தேங்காயின் இருமூடிகளிலும் நெய்தீபம் ஏற்றியும் வழிபடலாம்.

ஸ்ரீ புவனேஸ்வரி அம்மன் சன்னதி :

இச் சன்னதியில் ஸ்ரீ புவனேஸ்வரி அம்மனும் அம்பாளுக்கு முன்னால் “மகாமேரு” எனப்படும் ஸ்ரீ சக்கரநாயகியும் உள்ளனர். தமிழ்நாட்டில் உள்ள மகாமேரு அமையப் பெற்ற ஏழு ஸ்தலங்களில் இதுவும் ஒன்று. இங்கு ஒவ்வொரு ‘பௌர்ணமி’ அன்றும் பௌர்ணமி பூஜை நடைபெற்று வருகிறது. ஞானம் சிறப்படையச் செய்யும் `குண்டலினி தீட்சை’யும் அளிக்கப்படுகிறது.

ஸ்ரீ மாரியம்மன் திருவடி :

கோவில் வளாகம், கோவில்கள் இங்கு அமைக்கப்பட வேண்டும் என்று சுவாமி சக்தி அடிமை அவர்களுக்கு மாரியம்மன் உத்தரவு இரவு கிடைத்தது. அன்றிரவே சுவாமி சக்தி அடிமை தன் தொண்டர்களுடன் இவ்விடத்தை கோவிலாக நிர்மாணித்தார்கள்.

ஸ்ரீ புவனேஸ்வரர் சன்னதி :

மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெரிது என்பது போல் ஸ்ரீ புவனேஸ்வரர் (சிவன்) சக்தி வாய்ந்த பெருமான். எம் பெருமான் சிவன் அருளால் “பிரதோஷ பூஜை” ஒவ்வொரு பிரதோஷம் அன்று நடத்தப்பட்டு வருகிறது. பிறவா நிலை அடைய உதவும் ஒரு செயலாக `ஐப்பசி பௌர்ணமி’அன்று பிரதி வருடம் `அன்னாபிஷேகம்’ நடைபெற்று வருகிறது.. ‘கார்த்திகைசோமவாரம்’ அன்று பிரதி வருடம் ‘108 சங்காபி ஷேகம்’ நடைபெற்று வருகிறது.

ஸ்ரீ சந்தான பரமேஸ்வரர் சன்னதி :

இக் கோவிலில் உள்ள சந்தான பரமேஸ்வரர் விக்கிரகம் ஒரே கல்லில் 4 டன் எடையில் உருவாக்கப்பட்டுள்ளது. சந்தான பரமேஸ்வரரின் தலை பகுதி கேதுவாகவும், வால்பாகம் ராகுவாகவும் நடுவில் சிவலிங்க ரூபம் கொண்ட அமைப்பு ஆகும். இந்த விக்கிரகத்திற்கு பால் அபிஷேகம் செய்யும் போது பால் நீல நிறமாக மாறுகிறது. திருநாகேஸ்வரத்தில் நடக்கும் அற்புதம் இங்கும் நிகழ்கிறது. ஒவ்வொரு ஆயில்ய நட்சத்திர தினத்தன்று சிறப்பு பூஜை நடைபெற்று வருகிறது. .

ஸ்ரீ கருப்பணசுவாமி சன்னதி :

சந்தன¸கருப்பு மதுரை நோக்கி வரும் போது இவ்விடத்தை தேர்தெடுத்து காவல் தெய்வமாக விளங்கி வருகிறார். இன்று வரைக்கும் அவர் காவல் தெய்வமாக இரவில் உலாčவருவதாக இரவுக் காவலாளிகள் கூறுகின்றனர். ஒவ்வொரு மாதமும் ஸ்ரீ கருப்பணசாமிக்கு சிறப்பு பூஜை நடைபெற்று வருகிறது.

ஸ்ரீ எல்லைக் காளி அம்மன் சன்னதி :

மதுரை மேற்கு எல்லை காவல் தெய்வமாக விளங்கிய காளியம்மன் ஆலயம், கோச்சடை மாறவர்ம சுந்தரபாண்டிய மன்னன் ஆட்சிக்காலத்திற்குப் பின் காலச்சூழ்நிலையால் சிதிலமடைந்தது. இக்காவல் தெய்வத்திற்கு தனிச் சன்னதி எழுப்பி ஸ்ரீ எல்லைக் காளி அம்மன் என்ற பெயரிட்டு வழிபாடு நடத்தப்படுகிறது. ஒவ்வொரு ‘அஷ்டமி திதி’ நாளன்று சிறப்பு பூஜை நடைபெற்று வருகிறது. பக்தர்கள் தங்கள் கோரிக்கைகளை எழுதி அம்மன் காலடியில் வைத்து வழிபடும் போது தங்கள் எண்ணம் ஈடேறுவதாக பக்தர்கள் கூற்று.மிகவும் சக்தி வாய்ந்த மற்றும் ஆக்ரோஷமான தெய்வமாகும்.

அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவில் :

இங்கு பிரதான சக்தியாக வீற்றிருக்கும் அன்னை சமயாள் குடி மாரியம்மன் எட்டு கரங்களுடன் காட்சி தருகிறாள். சிறப்புமிக்க சக்தி வாய்ந்த பேசும் தெய்வமாக நின்று பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகின்றாள். பிரார்த்தனைகள் நிறைவேறியவுடன் பக்தர்கள் தங்கள் நன்றி அறிதலை சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள் செய்து வெளிப்படுத்தி வருகின்றனர். ஒவ்வொரு வருடமும் நவராத்திரி திருவிழா, ஆடித் திருவிழா கொண்டாடப்படுகிறது. அது போன்று தைப்பூசம் - (ஸ்ரீ சுவாமி அவர்களின் பிறந்தநாள் விழா) மத நல்லிணக்க விழாவாகவும், சமய ஒற்றுமை விழாவாகவும் கொண்டாடப்பட்டு ,அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.